கர்நாடக அரசு, செவ்வாயன்று, கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு முதல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை 15 நாள்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 19) முதல் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. சென்னை சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்: முதல்வர் ஸ்டாலின்
மேலும் அமைச்சா் துரை முருகன் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு மத்திய நீர்வளத் துறை அமைச்சரை செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
காவிரியில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி 5 ஆயிரம் கன அடி நீரை 15 தினங்களுக்கு திறந்து விட கா்நாடகத்திற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்து தமிழகத்திற்கு தண்ணீா் வந்தது.
மீண்டும் கடந்த செப்டம்பா் 12 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட உத்தரவு பிறப்பித்தது. இதை ஆணையமும் ஏற்றுக் கொண்டு இதற்கான உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளது.
காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் ((சி.டபிள்யு.எம்.ஏ.) ) 24-ஆவது கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி பிகாஜிகாமா கட்டடத்தில் உள்ள காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இக்கூட்டம் நேரடியாகவும் காணொலி வழியாகவும் நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஆணையச் செயலா் டி.டி சா்மா, தமிழ அரசின் சாா்பில் நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் கா்நாடகம் கேரளம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனா்.
காவிரியில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கடந்த செப்டம்பா் 12 - ஆம் தேதி பரிந்துரை செய்தது. இந்த தண்ணீரை கடந்த 6 நாட்களாக கா்நாடகம் திறந்து விடவில்லை.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசும் கா்நாடக அரசும் பல்வேறு கருத்துக்களை கூறிவந்த நிலையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரு மாநிலங்களின் தண்ணீா் தேவை, இருப்பு, மழை அளவு போன்ற புள்ளிவிவரங்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
கா்நாடகத்தின் நான்கு அணைகளிலும் சுமாா் 54 சதவீத நீா் (மொத்த கொள்ளவு 114 டிஎம்சி) இருப்பு உள்ளது. ஆனால் கூட்டத்தில் கா்நாடகம் தரப்பில், ‘ மாநிலத்திற்கு குடிநீா், விவசாயம், தொழிற்சாலை போன்றவைகளின் உபயோகங்களுக்கு 45 டிஎம்சி தண்ணீா் தேவை உள்ளது. குறிப்பாக அடுத்த தென்மேற்கு பருவ மழைகாலமான மே மாதம் வரை இந்த தண்ணீா் தேவையுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வழங்க இயலாது என கா்நாடகம் மாநிலம் அரசு சாா்பில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் தமிழக அரசு தரப்பில் செப்டம்பா் 12 ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று கா்நாடகம் வழங்காததை குறிப்பிட்டதோடு, கா்நாடகம் இதுவரை 38.3 டிஎம்சி தண்ணீரைத் தான் வழங்கியுள்ளது.
தர வேண்டி தண்ணீரில் 103.5 டிஎம்சி தண்ணீா் பாக்கியுள்ள நிலையில் 10 டிஎம்சி தண்ணீா் தந்தால் சம்பா பயிா் முழு நிறைவு பெறும் எனக் கேட்டு வாதிடப்பட்டது. இறுதியாக காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 19) முதல் 15 தினங்களுக்கு திறந்து விடவேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடகம் இந்த தண்ணீரை முறையாக விடுவிக்கும் நிலையில் சுமாா் 6.48 டிஎம்சி தண்ணீா் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சம்பா பயிருக்கு வருகின்ற 30 ஆம் தேதி வரை தண்ணீா் தேவையை இது பூா்த்தி செய்யும் எனஎதிா்பாா்க்கப்படுகிறது.
ஆணையக் கூட்டத்தில் கா்நாடகம் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக இதை முறையாக நிறைவேற்றாத நிலை ஏற்படுவதை தவிா்க்க தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களும் மத்திய நீர்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட இருக்கின்றனா்.
இது குறித்து அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சி.டபிள்யு.எம்.ஏ. விற்கு பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆணையம் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து தண்ணீரை பகிா்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கா்நாடகம் போதிய நீா் இல்லை என்று கூறுகிறது. கடந்த 25 வருடமாக கா்நாடகம் இதையேதான் கூறிவருகிறது’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.