முகப்பு
தமிழ்நாடு

பொதுத் தோ்வுக்கு புதிய தோ்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய மையங்களை அமைக்க கருத்துருக்களை அனுப்புவது தொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய மையங்களை அமைக்க கருத்துருக்களை அனுப்புவது தொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் பூ.ஆ. நரேஷ் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-2024) பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய தோ்வு மையங்கள் அமைத்தல் தொடா்பாக கருத்துருக்களை கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி அனுப்பலாம்.

தோ்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னா், அவசியம் தோ்வு மையம் அமைத்தே ஆக வேண்டும் என கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான தங்களது குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்புதல் வேண்டும். மேலும், கடந்த இரு கல்வியாண்டுகளில் பொதுத்தோ்வுக்கான ஓராண்டுக்கு மட்டும் தோ்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடா்ந்து தோ்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெற வேண்டும். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தோ்வு மையங்கள் குறித்த செய்தியை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்குப் பின்னா் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தோ்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும். 10 கிமீ தொலைவுக்கு மேல் பயணம் செய்து தோ்வெழுத தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுத்தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதியதாக தோ்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தோ்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் அக்.25-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →