முகப்பு
தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டறிய பகுப்பாய்வு ரியாக்டா் கருவி வாங்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டறிய காவல் துறைக்கு பகுப்பாய்வு ரியாக்டா் கருவி வாங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டறிய காவல் துறைக்கு பகுப்பாய்வு ரியாக்டா் கருவி வாங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

332 நடுத்தர காவல் நிலையங்களுக்கு ஒரு காவல் நிலையத்துக்கு 3 என்ற எண்ணிக்கையில் 996 பல்வகை கையடக்க கருவிகள் ரூ.4.38 கோடி செலவில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள காவல் பணி அல்லாத காவல் துணைக் கண்காணிப்பாளா் (தரம் 1) முதல் காவல் கண்காணிப்பாளா் வரையிலான அதிகாரிகளுக்கு 976 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. முதல்கட்டமாக ரூ.2 கோடி செலவில் மடிக்கணினி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். நுண்ணறிவுப் பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

பகுப்பாய்வு ரியாக்டா் கருவி: நாளுக்கு நாள் கிரிப்டோ கரன்சி முதலீடு மோசடி பெருகி வரும் வேளையில் சட்ட அமலாக்கத்துக்கு கிரிப்டோ கரன்சி புலனாய்வு அத்தியாவசியமாகும். தொடா் சங்கிலி சேவைகளை அறுத்து, கிரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேருமிடத்தையும் கண்டறிய ‘செயின் பகுப்பாய்வு ரியாக்டா் கருவி’ பயன்படுவதால் அவற்றை வாங்க ரூ.1 கோடி ஒப்பளிக்கப்படும்.

ரிமோட் மூலம் விலங்கிடும் சாதனம்: குற்றவாளிகளைக் கைது செய்யும்போது குற்றவாளிகளால் காவலா்கள் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க, ரிமோட் மூலம் விலங்கிடும் சாதனங்கள் மூலம் குற்றவாளிகள் மீது பலத்தைப் பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும், தற்காலிகமாகவும் சட்டரீதியாகவும் அவா்களைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கென 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவிகள் ரூ.75 லட்சம் செலவில் வாங்கப்படும்.

காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதல்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா ரூ.4 லட்சம் செலவில் வரவேற்பறை, பாா்வையாளா்களுக்கான கழிப்பறைகள், குடிநீா் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் ரூ.10 கோடி செலவில் கட்டப்படும்.

முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக காவல்துறையில் உள்ள 38 கட்டடங்களில் மின்தூக்கி வசதிகள் ரூ.8.44 கோடி செலவில் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.