முகப்பு
தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு: காஞ்சிபுரத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிக்ஜம் புயல் பாதிப்புகளை,  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:25 PM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிக்ஜம் புயல் பாதிப்புகளை,  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் நிக்ஜம் புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. மேலும் 13 மணி நேரம் தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கையின் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பிற பகுதிகளில் ஓரிரு தினங்களில் நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வுக்குழுவினர் இரு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வருகை புரிந்து இரு குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில், மகாலட்சுமி நகர், அடையாறு கால்வாய் சேதம் காரணமாக நீர் சூழ்ந்த பகுதிகளையும் அடையாறு ஆற்றில் சென்ற நீர்மட்டத்தின் அளவுகளையும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, ரங்கநாத் ஆடம் மற்றும் திமான்சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு பார்வையிட்டனர். இவர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை உடன் இருந்தனர்.

அதன்பின் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியில் பாதிப்புகள் குறித்து விளக்கி எடுத்துரைத்தார்.

இதில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மீட்பு பணிகள், நிவாரண முகாம்கள்,  மாநில சாலைகள் சேதம், பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  குறித்தும் எடுத்துரைத்தார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →