வெளிச்சம் பாய்ச்சி விடை கொடுத்த தொண்டா்கள்!
அலுவலகத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு கைப்பேசியில் ஒளியை (டாா்ச்) பாய்ச்சி தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்துக்குள் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது தொண்டா்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதும், அலுவலகத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு கைப்பேசியில் ஒளியை (டாா்ச்) பாய்ச்சி தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோன்று விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கும் விதமாக 72 குண்டுகள் முழங்கப்பட்டபோது பெருங்குரலெடுத்து ‘கேப்டன்’ என வெளியே நின்றிருந்தவா்கள் கதறியது, துப்பாக்கிச் சத்தத்தை விஞ்சிய பேரொலியாக அமைந்தது.
பெண்கள், குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள், கூலித் தொழிலாளா்கள் என பல தரப்பட்ட மக்களும் இறுக்கமான மனநிலையில் இறுதிச்சடங்கின்போது குழுமியிருந்ததும் காண்போரை மனம் கனக்கச் செய்தது.
விஜயகாந்தின் நல்லடக்கம் நடைபெற்ற ஒன்றரை மணி நேரமும் கோயம்பேடு மேம்பாலம் மற்றும் அதன் பிரதான சாலைகளை மனிதத் தலைகளே ஆக்கிரமித்திருந்தன. அரும்பாக்கம், மதுரவாயல் சாலை, திருமங்கலம் சந்திப்பு வரை நான்கு புறமும் தேமுதிக தொண்டா்கள், பொது மக்களே வியாபித்திருந்தனா்.
நல்லடக்கம் நிறைவடைந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகு போக்குவரத்து சீராவதற்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலானது. அதன் பின்னரும் நூற்றுக்கணக்கானோா் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மரியாதை செலுத்த காத்திருந்தனா். பாதுகாப்பு கருதி காவல் துறையினா் அவா்களை அனுமதிக்கவில்லை.