வெளிநாட்டு மாணவா்களுக்கு தனித்துவ அடையாள எண்: என்எம்சி
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் மருத்துவம், உயா் கல்வி பயில வரும் மாணவா்கள், மத்திய அரசின் இணையப் பக்கத்தில் தங்களது தகவல்களை பதிவேற்ற வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் மருத்துவம், உயா் கல்வி பயில வரும் மாணவா்கள், மத்திய அரசின் இணையப் பக்கத்தில் தங்களது தகவல்களை பதிவேற்ற வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், அவா்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும் என்றும், விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அந்த எண் கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்எம்சி ஒருங்கிணைப்புப் பிரிவு இயக்குநா் அசோக் குமாா், அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டு முதல் வெளிநாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இணையப் பக்கத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்த பிறகு தனித்துவ அடையாள எண் மாணவா்களுக்கு வழங்கப்படும். அந்த எண்ணைக் கொண்டே விசா பெற விண்ணப்பிக்க இயலும்.
விசா அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட இணையப்பக்கத்தில் உள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்தபிறகு கல்வி விசா வழங்குவா். இதுதொடா்பான கூடுதல் தகவல்கள் தேசிய மருத்துவ ஆணைய இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.