அடுத்த 4 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் மே.14-ம் தேதி வரை இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே.14-ம் தேதி வரை இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் (போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ தென்மேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெற்று நாளை காலை தீவிர புயலாகவும் நள்ளிரவு மிகத் தீவிர புயலாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மே 15ல் சற்றே வலுக்குறைந்து மே 14-ம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
மே 10(இன்று) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 10 - மே 14 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மே 13 மற்றும் 14ல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு..
மே 10 முதல் மே 12 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.