பாபநாசத்தில் செல்போன் வெடித்து பெண் பலி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே அருகே ஆடுதுறை, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கபிஸ்தலத்தில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார். கோகிலா புதன்கிழமை வழக்கம் போல் கடைக்கு வந்து தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
Advertisement
அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து, கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
பின்னர், கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.