முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு: பேரவைத் தலைவரின் உத்தரவு அரசிதழில் வெளியீடு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:16 AM
தமிழக சட்டப்பேரவை
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:15 PM

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேரவைத் தலைவரின் உத்தரவு விவரம்:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த என்.புகழேந்தியின் மறைவையடுத்து, அந்தத் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

சட்டப்பேரவைத் தலைவரின் இந்த அறிவிப்பு குறித்த விவரத்தை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.

2 இடங்கள் காலி: விக்கிரவாண்டி சட்டப்பேரவையின் உறுப்பினராக இருந்த என்.புகழேந்தி (திமுக), புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா். அவரது மறைவையடுத்து, தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் விஜயதரணி தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலுடன் அந்தத் தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆனால், விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிக்கு எப்போது இடைத்தோ்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவைத் தோ்தலின் ஏதாவது ஒரு கட்டத்தில் இடைத்தோ்தல் நடத்தப்படுமா அல்லது 6 மாதங்களுக்குள் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அக்டோபருக்குள் நடத்தப்படுமா என்பதை இந்திய தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்.