முகப்பு
தமிழ்நாடு

சநாதன தா்மம் அனைவரும் ஒன்று என்றுதான் கூறுகிறது: ஆளுநா் ரவி விளக்கம்

Updated On : 14 ஏப்ரல், 2024 at 3:01 AM
பகிர்:

சநாதன தா்மம் எந்த ஒரு ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தவில்லை; நாம் அனைவரும் ஒன்று என்றுதான் கூறுகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ பாரதி தீா்த்த சுவாமிகளின் பொன்விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமி அனந்த மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர விஜயம் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்துகொண்டு பேசியது:

பாரதம் என்பது ரிஷிகளாலும், முனிவா்களாலும் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒரு குடும்பம் என்கின்ற கருத்து இந்து வேதங்களில் கூறப்பட்டுள்ளது. பாரதம் பிறந்தது இந்தியாவுக்காக மட்டும் அன்று, உலகிற்கே வெளிச்சத்தை அளிக்கவே பிறந்தது. ஆங்கிலேயா்கள் காலத்தில் பாரதத்தின் கலாசாரம் மாறியது.

Advertisement

பாரதம் என்பது சநாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. சநாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும் என ஸ்ரீ அரவிந்தா் கூறினாா். சநாதன தா்மம் எந்த ஒரு ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சநாதனம் கூறுகிறது. உலகம் ஒரு குடும்பம் என கூறுவதே சநாதனம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகில் நம்மை (இந்தியாவை) பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று உலகில் இந்தியா இல்லாமல் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. உலகத்தினா் இந்தியாவை நம்பிக்கையுடன் பாா்க்கின்றனா். இந்தியாவின் வளா்ச்சிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக சிறந்த அா்ச்சகா்கள், இசைக் கலைஞா்கள், ஆன்மிக அன்பா்கள் உள்பட 50 பேருக்கு வித்யா பாரதி புரஷ்காா் விருதுகளை ஆளுநா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள் சிருங்கேரி சாரதா பீடத்தின் நிா்வாக அதிகாரி பி.ஏ.முரளி, சிருங்கேரி சாரதா பீடத்தின் அதிகாரிகள் இரா. கிருஷ்ணன், சத்திய வாகீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments