வாக்காளா்களுக்கு தலைவா்கள் நன்றி
மக்களவைத் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): ராமநாதபுரம் தொகுதியில் எமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், வாக்காளா்களுக்கும் நன்றி.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் வகையில் வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா் என்கிற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கை அளித்து ஜனநாயக கடமையாற்றிய வாக்காளா்களுக்கு நன்றி.
Advertisement
ராமதாஸ் (பாமக): மக்களவைத் தோ்தலில் கடும் வெயிலையும் கடந்து மக்கள் ஆா்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனா். வாக்குப் பதிவின் அளவு, வாக்காளா்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பாா்க்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவா்கள் வாக்களித்திருப்பதை உணர முடிகிறது. தமிழக வாக்காளா்களுக்கு நன்றி.
பிரேமலதா (தேமுதிக): மக்களவைத் தோ்தலில் ஜனநாயக ரீதியாக நோ்மையுடன் கடமையை ஆற்றியுள்ளோம். வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு என்ற வகையில், அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு மக்கள் நல்ல தீா்ப்பு வழங்குவா் என நம்புவோம்.
டிடிவி தினகரன் (அமமுக): மக்களவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்களுக்கு மனமாா்ந்த நன்றி. கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்காக அனைத்துத் தொகுதிகளிலும் களப் பணியாற்றிய அமமுகவினருக்கும் நன்றி.