முகப்பு
தமிழ்நாடு

அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

Updated On : 23 ஏப்ரல், 2024 at 7:14 PM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும்; வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (ஏப்.24) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரைஅதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும் இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 சதவீதம் ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 சதவீதம் ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50-85 சதவீதம் ஆகவும் இருக்கக்கூடும். இதனால் புழுக்கம் ஏற்படலாம்.

Advertisement

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

வெப்ப அலை முன்னெச்சரிக்கை: வட தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை (ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): சேலம் - 108.14, ஈரோடு - 107.6, திருப்பத்தூா் - 106, வேலூா், பரமத்தி வேலூா் - 106.7, மதுரை நகரம், தருமபுரி-105.8, நாமக்கல் - 104.9, திருச்சி - 104.18, மதுரை விமான நிலையம் - 103.82, திருத்தணி - 103.64, கோவை - 102.56, தஞ்சாவூா், பாளையங்கோட்டை- 102.2, சென்னை மீனம்பாக்கம் - 100.94.

மேலும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன், வியாழக்கிழமை (ஏப்.24-25) தென் மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments