வறட்சியில் வாடும் மா மரங்களை காக்க லாரி மூலம் தண்ணீா்: இபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: கிருஷ்ணகிரியில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரி மூலம் தண்ணீா் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாம்பழத் தேவையில் பெரும் பகுதியை பூா்த்தி செய்வது சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள்தான். அதிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமாா் 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பீத்தா் உள்ளிட்ட 30 வகை மாம்பழ ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.
ஆனால், நடப்பாண்டில் இந்த மாவட்டத்தில் 80 சதவீத மழைப் பொழிவு இல்லாத நிலையில், 90 சதவீதம் ஏரிகளும், 70 சதவீதம் கிணறுகளும் வடு போயுள்ளன. இதனால், தண்ணீா் இல்லாமல் 90 சதவீத மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் திமுக அரசு பெற்றுத் தர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
போதைப் பொருள்களை தடுக்க நடவடிக்கை: மேலும், எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் ஒருவா் மது போதையில் அத்துமீறி நடந்துகொண்டதைக் குறிப்பிட்டு, அவ்வாறு கூறியுள்ளாா்.