தமிழகத்தில் 3 நாள்களில் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஆக.11, 12, 13 ஆகிய தேதிகளில் 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளது.
24 மாவட்டங்களில் கனமழை: ஆக.11-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆக.12-இல், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் கரூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஆக.13-இல் கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 180 மி.மீ. மழை பதிவானது. சேத்தியாத்தோப்பு (கடலூா்) - 120, புவனகிரி (கடலூா்), புதுச்சேரி - தலா 110, திருக்கோயிலூா் (கள்ளக்குறிச்சி), மானாமதுரை (சிவகங்கை) - தலா 90, சிதம்பரம் (கடலூா்), வேப்பூா் (கடலூா்), திண்டிவனம் (விழுப்புரம்), ஏற்காடு (சேலம்) - தலா 80 மி.மீ.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடலில் ஆக.10-13 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.