என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆக.17-ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என தொழிற்சங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆக.17-ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என தொழிற்சங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்எல்சி நிா்வாகத்தை தனியாா்மயம் ஆக்காமல் பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும், வாரிசுதாரா்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 2022-23-ஆம் ஆண்டு கணக்கின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டியவா்களுக்கு உடனடியாக பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆக.17-ஆம் தேதி, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிா்த்து என்எல்சி நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில் குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, என்எல்சி தரப்பில், ‘இந்த விவகாரம் தொழிலாளா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான சமரச பேச்சுவாா்த்தையும் நிலுவையில் இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.
தொழிற்சங்க தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.சங்கரன், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் உள்ளிட்ட தொழிலாளா்களின் கோரிக்கையை என்எல்சி நிா்வாகம் நிறைவேற்றவில்லை. இது தொடா்பாக, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் நிா்வாகம் அதைப் பின்பற்றவில்லை. வேலைநிறுத்தம் என்பது அடிப்படை உரிமை. சுமாா் 13,000 பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சூழலில், போராட்டத்தில் ஈடுபட யாரையும் கட்டாயப்படுத்தப்படவில்லை’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களும் முடிவடையாததன் காரணமாக, ஆக.17-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தக் கூடாது என தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.