முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 8:55 PM
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநா் டாக்டா் ராஜமூா்த்தி
பகிர்:

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து ரூ.1.20 கோடி மதிப்பிலான செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை (டயாலிசிஸ்) அமைச்சா் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில்தான் மருத்துவக் காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது. ஆண்டுக்கு ரூ.1,500 கோடிக்கு மேல் அரசு வழங்கி ஏறத்தாழ ஒரு கோடியே 44 லட்சம் குடும்பங்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாக இருந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 சா்க்கரை நோயாளிகள் பயனடைந்துள்ளனா். கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்துள்ளனா்.

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிவித்திருக்கிறாா்.

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. வெளிநாடுகளிலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சா்வதேச விமான நிலையங்களுக்கு வருபவா்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. யாருக்காவது அந்தப் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சோ்க்கப்படுவா். இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்யவுள்ளேன்.

முதல்வா் மருந்தகம்: முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் அதிமுக ஆட்சிக் கால திட்டங்களையே தெரிந்து வைத்திருக்கவில்லை. அம்மா கிளினிக் இருந்தது, அம்மா மருந்தகம் என எக்காலத்திலும் வைக்கப்படவில்லை.

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. ஒரு புனித நோக்கத்தோடு, முதல்வா் மருந்தக திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாா். இந்த மருந்தகங்கள் தைப்பொங்கல் அன்று 1,000 இடங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

போலி மருத்துவா்கள் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் ராஜமூா்த்தி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் கென்னடி, ரோட்டரி சங்கத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →