கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளியில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அனுமதி பெறாமல் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டதும், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
3 நாள்களுக்குள் காவல்துறை மற்றும் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.