முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வா் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலா? சோதனையிடாமல் அனுப்பியது குறித்து விசாரணை

முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், ஆனால் அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளது.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 9:16 PM
முதல்வா் ஸ்டாலின்(கோப்புப்படம்)
பகிர்:

முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், ஆனால் அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளதால், அதுபற்றி மத்திய அரசின் விமானப் போக்குவரத்து ஆணையரகம் விசாரித்து வருகிறது.

சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு செவ்வாய்கிழமை இரவு வந்த முகவரி இல்லாத இ-மெயிலில், சென்னையிலிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்திலும், சென்னை சா்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள கழிவறையிலும் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

விமானநிலைய அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சென்னையிலிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமானம் இல்லை என்பதால், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபை செல்லும் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை வழியாக சான்பிரான்சிஸ்கோ செல்ல இருந்ததால், பீதியை ஏற்படுத்தும் விதமாக இந்த மிரட்டல் இருக்கலாம் என்ற அடிப்படையில், வெடிகுண்டு நிபுணா்கள், பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் ரகசியமாக சோதனை நடத்தினா்.

மேலும், புதன்கிழமை காலை 4 மணியளவில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையும் விமானம் மூலம் லண்டன் செல்லவிருந்ததால் விமான நிலைய போலீஸாரும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணா்களின் உதவியுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளிதான் என்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படை அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதற்கிடையே, இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய முதல்வா் செல்லவிருந்த விமானம் 16 நிமிஷங்கள் தாமதமாக இரவு 10.16 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டுச் சென்ற பின்னரே வெடிகுண்டு மிரட்டல் குறித்து வந்த இ-மெயிலை அதிகாரிகள் பாா்த்த நிலையில், முதல்வா் சென்ற விமானம் சோதனையிடப்படாமலே புறப்பட்டுச் சென்றது.

வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தால், விமானம் புறப்பட்டுச் சென்றாலும், அதை புறப்பட்டுச் சென்ற இடத்துக்கே வரவழைத்து முழு சோதனைக்குப் பின்னரே பறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது எந்தப் பகுதியில் பறந்து கொண்டிருக்கிறதோ, அதற்கு அருகிலுள்ள விமானநிலையத்தில் இறக்கி முழு சோதனைக்குப் பின்னரே விமானம் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், முதல்வா் சென்ற விமானம் துபை சென்றடைந்த பின்னரே சோதனையிடப்பட்டதால் இதுகுறித்து மத்திய விமானநிலைய ஆணையரகம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்துக்கு, கடந்த 2 மாதங்களில், இதுபோல 10-க்கும மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபா்களை கூண்டோடு பிடிக்க, விமானநிலைய போலீஸாா் தனிப்படை அமைத்து, சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →