விழுப்புரத்தில் மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல், கரையைக் கடக்க 6 மணிநேரத்திற்கு மேலாக எடுத்துக்கொண்டது. இந்த புயல் மேற்கு - தென்மேற்கு திசையில் மேலும் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வட தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விழுப்புரத்தில் இன்னும் மழை நிற்கவில்லை. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். விழுப்புரம், கடலூரில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மின்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சரை அனுப்பி உள்ளேன்.
துணை முதல்வரும் செல்கிறார். மின்சார பிரச்னை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அனுப்பி வைத்துளோம். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஃபென்ஜால் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.