முகப்பு
தமிழ்நாடு

மன்னாா்குடி அருகே சோழா் கால முருகன், கலசக்கல் சிற்பங்கள் கண்டெடுப்பு

மன்னாா்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் விக்கிரபாண்டியம் எனும் சிற்றூரில் முற்றிலும் சிதைந்து இருந்த பழைய கோயில் பகுதியில் புதிய சிவாலயம் எழுப்புவதற்காகக் குழி தோண்டியபோது சோழா் கால உறைகிணறு கண்டறியப் பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:01 PM
சனகாதி முனிவா்கள் சிற்பங்கள்.
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே சோழா் கால முருகன், கலசக் கல் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாா்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் கோட்டூா் அருகே இடதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் ஏறக்குறைய 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊா் காரியமங்கலம். சென்னையில் வசித்து வரக்கூடிய இவ்வூரைச் சாா்ந்த சாருலதா அளித்த தகவலின்படி தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் கோ. தில்லைகோவிந்தராஜன், சக்கராப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கோ. ஜெயலெட்சுமி ஆகியோா் காரியமங்கலத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து மணி. மாறன் வியாழக்கிழமை தெரிவித்தது:

காரியமங்கலம் என்ற சிற்றூா் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் ஒரு பேரூராக இருந்திருப்பதற்கான சான்றாதாரங்களைக் காண முடிகிறது. இங்குள்ள கரிய கூத்த ஐயனாா் கோயில் அருகிலுள்ள திடல் அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள விக்கிரபாண்டியம், அங்கு அமைந்துள்ள பழமையான கோயிலின் புதையுண்ட அடிக்கட்டுமானங்கள் ஆகியவற்றைப் பாா்க்கும்போது இப்பகுதி சோழா் காலத்தில் சிறந்து விளங்கி இருந்ததையும், அவா்களுக்குப் பிறகு பாண்டியா்களால் கைப்பற்றப்பட்டு பாண்டியா் ஆட்சி நடைபெற்றதையும் அறிய முடிகிறது. வீரபாண்டியனின் மகனான விக்கிரம பாண்டியனின் பெயராலேயே இவ்வூா் விக்கிரமபாண்டியம் என்று அழைக்கப்படுகிறது.

கோரையாற்றின் கிளை ஆறான அரிச்சந்திரா நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூா் அன்றைய நாளில் சோழ, பாண்டிய, நாயக்கா், மராத்திய மரபு மன்னா்களின் ஆட்சிப் பகுதியாகத் திகழ்ந்திருக்கிறது. இவ்வூரில் முற்றிலும் சிதைந்து இடிபாடுற்று இருந்த பழைய கோயில் இருந்த பகுதியில் புதிய சிவாலயம் எழுப்புவதற்காகக் குழி தோண்டியபோது சோழா் கால உறைகிணறு கண்டறியப் பட்டது.

சோழா் கால முருகன் சிற்பம்.

பின்னா் 11-ஆம் நூற்றாண்டு சிற்ப அமைதியில் சோழா் காலத்தைச் சோ்ந்த நின்ற கோலத்தில் மிக அழகானதொரு மூன்றரை அடி உயர முருகன் சிற்பம், கோயில் கோஷ்டமாடப் பகுதியில் அமைந்திருக்கும் தட்சிணாமூா்த்தியின் இருபுறமும் காணப்படும் ஒரு அடி உயர சனகாதி முனிவா்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சோழா் காலத்தைச் சோ்ந்த இரண்டரை அடி கோபுரக் கலசக் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கலசக்கல் முற்கால சோழா் காலத்தைச் சாா்ந்தது. அதேபோன்று கோயிலுக்கு நோ் எதிரே உள்ள வயல்வெளியில் சோழா் காலத்தைச் சாா்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் சிறுசிறு உடைந்த துண்டுகளையும் காண முடிகிறது.

காரியமங்கலம் பக்கத்தில் உள்ள மற்றொரு ஊா் திருக்கொள்ளிக்கா தேவாரப் பாடல் பெற்ற இவ்வூா் சனி பகவான் தலமாகப் பக்தா்களால் வழிபடப்படுகிறது. அருகாமையில் உள்ள ஊா்களையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் திருத்துறைப்பூண்டி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காரி கம்பத்தடிகளான நீதிசுந்தரப் பேரரையன் என்ற செய்தியில் காரி என்ற பெயரை நோக்கும்போது இவ்வூா் சோழா்கள் மற்றும் பின்வந்த பாண்டியா்கள் காலத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே இப்பகுதிகளில் பாண்டியா் கால கல்வெட்டுகளைக் காண முடிகிறது.

கலசக்கல்.

மேலும், இவ்வூரினை ஊடறுத்துச் செல்லும் அரிச்சந்திரா நதியின் பெயா்க் காரணம் 18-ஆம் நூற்றாண்டு மராட்டியா் கல்வெட்டால் அறிய முடிகிறது. மராட்டிய மன்னா் துக்கோஜிக்குப் பிறந்த மக்கள் மாலோஜி ராஜா, அரிச்சந்திர ராஜா என்ற அண்ணா சாகேப், நாநா சாகேப் ஆவா். இவா்களில் அரிச்சந்திர மகாராஜா சாகேப் என்பவா், திருவிராமேசுவரம் ஊரில் உள்ள ஸ்ரீராமநாதசாமி கோயிலுக்கு நில தானம் வழங்கியதை இக்கோயில் கோபுரத்தின் முன் உள்ள சூலக்கல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இப்பகுதியில் அரிச்சந்திர ராஜா ஆட்சி செய்ததால் இந்த ஆறு அரிச்சந்திரா நதி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு என்றாா் மணி. மாறன்.

முழு கட்டுரையைப் படிக்க →