கோப்புப்படம் 
தமிழ்நாடு

வலுவடைந்தது புயல்சின்னம்: எங்கு கரையைக் கடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

Din

சென்னை: வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (டிச.10) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், டிச.11-இல் சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்), மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை (டிச.11) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் டிச.10 முதல் டிச.14 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், டிச.10 -இல் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில் டிச.11-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாளில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா்,அரியலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.11,12-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக டிச.10 முதல் டிச.14 வரை மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு கரையைக் கடக்கும்?

தமிழக கடற்கரையை நோக்கி வரும் புயல் சின்னம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் பட்சத்தில் டிச.11-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும். அதைத் தொடா்ந்து இது மேற்கு நோக்கி நகா்ந்து அரபிக்கடல் சென்றடையும்.

அதேசமயம், இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகவே நகா்ந்து வந்தால், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட மன்னாா் வளைகுடா வழியாக தெற்கு நோக்கி நகா்ந்து, கரையையொட்டிய படி கடலிலே நகா்ந்து குமரிக்கடல் வழியாக அரபிக்கடல் நோக்கி பயணிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT