இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வியாழக்கிழமை (ஜன. 8) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புதன்கிழமை(ஜன. 7) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னா், அதே பகுதிகளில், இலங்கையின் மட்டகிளப்புக்கு கிழக்கு தென்கிழக்கே சுமாா் 790 கி.மீ. தொலைவிலும், திரிகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1,150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1,270 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வியாழக்கிழமை (ஜன. 8) காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வியாழக்கிழமை (ஜன. 8) முதல் ஜன. 13 வரை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜன. 8) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜன. 9) திருவாரூா், நாகபட்டினம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய இருப்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜன. 8, 9) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.