டங்ஸ்டன் சுரங்கத்துக்கு 10 மாதங்களாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: இபிஎஸ்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு 10 மாதங்களாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இபிஎஸ் உரை
சென்னை: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு கடந்த 10 மாதங்களாக திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில சட்டத் திருத்தம் வந்தபோதே திமுக எம்.பி.க்கள் எதிர்த்திருக்கலாம். மதுரை மாவட்டம் மேலுர் அருகே அரிட்டப்பாட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்தான் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது என்று கூறினார்.
மேலும், இங்கு சுரங்கம் அமைந்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும், அவற்றில் அரிட்டாப்பட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க இடம் என்றும், குடவரைக் கோயில், சமணச் சின்னங்கள், தமிழ், பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட புராதன நினைவிடமாக இருப்பதும், பஞ்ச பாண்டவர் கல் படுக்கைகள் இருக்கும் இடமாக தொல்பொருள் ஆய்வு சிறப்பிடமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு தற்போது தமிழக அரசு எழுதிய கடிதத்தைக் கடந்த பிப்ரவரி மாதமே எழுதியிருக்கலாமே.
இந்த சுரங்கம் அமைப்பதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய போதே இந்த எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். கடிதம் எழுதியிருக்க வேண்டும். அப்போது சுரங்கத்துக்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு உரிய அழுத்தமும் கொடுக்கவில்லை.
மாறாக, அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களாக தமிழக அரசு என்ன செய்தது? இந்த விவரத்தை குறித்து முன்பே கடிதம் எழுதியிருந்தால், ஏலத்தையே தடுத்து நிறுத்தியிருக்கலாம். மாநில உரிமைகள் பறிபோகும்போதே திமுக எம்.பி.க்கள் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.