முகப்பு
தமிழ்நாடு

பாவம் செய்பவர்தான் புண்ணியம் பற்றி கவலைப்பட வேண்டும்: யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

பாவம் செய்பவர்தான் புண்ணியம் பற்றி கவலைப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருத்து

Updated On : 18 டிசம்பர், 2024 at 12:12 PM
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

சென்னை: பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அம்பேத்கர் பெயரை சொல்வதை விட்டுவிட்டு கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் செல்லலாம் என்று அமித் ஷா பேசியிருந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷா பெயரைக் குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்கம் செல்ல முடியாது, அம்பேத்கர் என்று சொல்வது தற்போது நாகரீகமாகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இத்தனை முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று கூறியிருந்தது சர்ச்சையாகியிருந்தது.

அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள்கள் விவாதத்தின் நிறைவாக செவ்வாய்க்கிழமை சுமார் ஒன்றரை மணிநேரம் அமித் ஷா உரையாற்றியிருந்தார்.

அப்போது அவர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அம்பேத்கரை அவமதித்ததற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அமித் ஷாவின் பேச்சுக்கான விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →