தமிழ்நாடு

தை அமாவாசை: காவிரி, கொள்ளிடக் கரைகளில் தர்ப்பணம்

DIN

திருச்சி: தை அமாவாசை நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மறைந்த தங்களது முன்னோர்களுக்கு, பொதுமக்கள் காவிரிக் கரைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாள்களில், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்து மக்களின் வழக்கம். இந்த நிகழ்வுகளுக்குத் திருச்சியைப் பொருத்தவரை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை பிரத்யேக இடமாக விளங்கி வருகிறது. இந்த நாள்களில் இங்கு பல ஆயிரக்கணக்கானோர் திரள்வர்.

இதன்படி, தை அமாவாசை நாளான இன்று திருச்சியில் காவிரிக் கரையான அம்மா மண்டபம், கருட மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட காவிரிக் கரையின் அனைத்து படித்துறைகளிலும், கொள்ளிட ஆற்றங்கரைகளில் உள்ள படித்துறைகளிலும் ஏராளமான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்தனர்.

காவிரியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால், பெரும்பாலோனோர் ஆற்றுக்குள் இறங்கி மணல் திட்டுகளில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து, பிண்டங்களைத் தண்ணீரில் கரைத்துவிட்டு, புனித நீராடிவிட்டு கோயில்களுக்குப் புறப்பட்டனர். மேலும், படித்துறைகளில் காத்திருந்த ஏழை, எளியோருக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.

தை அமாவாசையையொட்டி, அம்மா மண்டபம் உள்பட காவிரி படித்துறை பகுதிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மா மண்டபத்தில் சேரும் வாழை இலை, பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை உடனுக்குடன் அகற்றும் பணியில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்துவிட்டு புறப்படும் முன்பு ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்துச் செல்வது வழக்கம். இதன்படி, அம்மா மண்டபம் பகுதியில் அமர்ந்திருந்த ஆதரவற்றவர்களுக்குப் பலரும் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

கம்பரசம்பேட்டை, முக்கொம்பு, காந்திபுரம், குடமுருட்டி, யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட மாவட்டத்தில் காவிரிக்கரை மற்றும் கொள்ளிடக் கரைகளில் உள்ள அனைத்து படித்துறைகளிலும், பாசனக் கால்வாய் படித்துறைப் பகுதிகளிலும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாலையே நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதன்காரணமாக காவிரி, கொள்ளிடக் கரைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஏராளமானோர் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT