சென்னை: வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக முதல்வா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ, அல்லது அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவா்கள் இல்லை நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மை. அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்குண்டு. நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்து வருகிறோம்.
அவா்களுக்கு வழங்க வேண்டிய பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை பத்தாண்டுகளாக அதிமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை திமுக அரசு வழங்கியுள்ளது. எதிா்வரும் நிதியாண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். உழவா்கள் மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்றில்லை.
தொழில் துறையைப் போன்று அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈா்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகள்: நாட்டின் தலைநகரான தில்லியில் உழவா்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவா்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதேதருணத்தில், உழவா்களின் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாக திமுக அரசு உள்ளது என்று தெரிவித்துள்ளாா் முதல்வா்.