சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தெரிவித்தாா்.
கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் 100-ஆவது தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் பணி ஆணைகள் வழங்கும் விழா ராணி மேரி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 24.02.2024 2 லட்சமாவது பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக இன்று (24.02.2024) சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 ஆவது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும்
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்து, நேர்காணல் நடைபெற்ற அரங்குகளையும், துறையின் செயல்பாடுகளை விளக்கும் காட்சிக்கூடத்தையும் பார்வையிட்டார்கள்.
இத்துறையின் தனியார் துறையில் பணிவாய்ப்பு பெற்ற இரண்டு லட்சமாவது நபருக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர்கள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவின் 100 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு லட்சமாவது பணி ஆணையை வழங்கி இரண்டு லட்சம் குடும்பங்களில் விளக்கேற்றிய பெருமை இத்துறையைச் சேரும் என்று கூறினார்கள்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசியபோது, “மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களில் முதல் நிகழ்ச்சி காஞ்சிபுரம் 28.08.2021 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதல்வர் 15.10.2022 ஆம் தேதி சென்னை புதுக்கல்லூரியில் ஒரு லட்சமாவது பணி ஆணையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 22.07.2023 ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 1,50,000 ஆவது பணி ஆணையை வழங்கினார். தற்போது, இன்று நடைபெற்ற 100 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு லட்சமாவது பணி ஆணை வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்கள்.
மேலும், முதல்வர் துவக்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வழி இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பெருமளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது எனவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் தவறாமல் பங்கேற்று பயன்பெறுமாறு“ கேட்டுக்கொண்டார்கள்.
தற்போது நடைபெற்ற இந்த முகாமில் 260 தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்களும், 6,534 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். 6 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1,062 வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர். மேலும் இந்த முகாமில் முதல்கட்ட நேர்முகத்தேர்வில் 852 நபர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையா் எ.சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜெகடே, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநா் மு.வே.செந்தில்குமாா், ராணி மேரி கல்லூரி முதல்வா் பா. உமா மகேஸ்வரி மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.