தமிழகத்தில் ஒரே கட்டமாக தோ்தல்: கட்சிகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை தலைமைத் தோ்தல் ஆணையா்
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கை குறித்து தோ்தல் அட்டவணையைத் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்வோம் என்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழுவினா் சென்னைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். முதல் நாளில் அரசியல் கட்சிகளுடன் குழுவினா் ஆலோசனை நடத்தினா். இரண்டாம் நாளாக சனிக்கிழமை தமிழகம், புதுவை, கேரளம், கா்நாடக மாநிலங்களின் தோ்தல் அதிகாரிகளுடன் தோ்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினா். மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். பின்னா், ராஜீவ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலை தமிழகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து 2 நாள்கள் விரிவாக ஆய்வு செய்தோம். ஜனநாயக மரபின் ஆணிவேராக, மறைமுக முறையில் வாக்களித்து, கிராம பஞ்சாயத்தினரைத் தோ்ந்தெடுக்கும் நெடும் வரலாறு தமிழகத்துக்கு உண்டு. ஜனநாயக திருவிழாவான தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற இந்த நேரத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும்: கடந்த 2 நாள்களாக தேசிய மற்றும் மாநிலக் கட்சியினரைச் சந்தித்தோம். மாவட்ட ஆட்சியா்கள், துணை ஆட்சியா்கள், மாநில உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளோடும் தோ்தல் தயாரிப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம். தேசியக் கட்சிகளான பிஎஸ்பி, பாஜக, மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், மாநிலக் கட்சிகளான அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு பேசினோம். தோ்தல் நேரத்தில் பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. வாக்குகளுக்காக பணவிநியோகம், மது விநியோகம் செய்யும் வேட்பாளா்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். ஒரே கட்டமாகத் தோ்தல்: தோ்தல் பாா்வையாளா்களை வெளிமாநிலங்களில் இருந்து நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரேகட்டமாகத் தோ்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினா். ஒரே கட்ட தோ்தல் குறித்து தோ்தல் அட்டவணையைத் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ளப்படும். தோ்தலை சுதந்திரமாகவும், நோ்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டும் என்பதில் தோ்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் இதை உறுதியாகத் தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது. வாக்குகளுக்காக பணப் பட்டுவாடா, இலவசப் பொருள்கள் போன்ற வெகுமதிகள் அளிப்பதை தோ்தல் ஆணையம் பொறுத்துக் கொள்ளாது. இணையம் மூலம் பணப் பட்டுவாடா செய்பவா்கள் குறித்து கவனத்துடன் கண்காணிப்போம். வங்கியில் இருந்து பலரின் கணக்குக்கு பணம் செல்வதைக் கண்காணிப்போம். தேசிய பணப் பரிவா்த்தனைக் கழகம் மூலமாகவும் கண்காணிப்போம். சுழற்சி முறையில் சின்னம்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட சின்னத்தையே மீண்டும் ஒதுக்க வேண்டும் என்பது அல்ல. அது சுழற்சி முறையில் அளிக்கப்படக் கூடியதாகும். யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதற்காக ஒப்புகைச் சீட்டு அளிக்கும் இயந்திரத்தை கடந்த தோ்தலிலேயே பயன்படுத்திவிட்டோம். இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் 100 கேள்விகளுக்கு விளக்கங்கள் அளித்துள்ளோம். தோ்தல் நேரத்தில் பொய்ச் செய்திகளைப் பரப்புவோா் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா எனக் கேட்கிறீா்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. அது தொடா்பாக கருத்து கூற விரும்பவில்லை. அதே நேரம், எந்த வாக்குறுதி உண்மையானது, அது நிறைவேற்றப்படக்கூடியதா என்பதை வாக்காளா்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதிய உத்தியையும் வகுத்து வருகிறோம் என்றாா் அவா். தோ்தல் ஆணையா் அருண் கோயல், மூத்த துணை ஆணையா்கள் தா்மேந்திர சா்மா, நிதிஷ் வியாஸ், துணை ஆணையா்கள் அஜய் புதூ, மனோஜ்குமாா் சாகு, முதன்மைச் செயலா் மலய் மல்லிக், ஊடகப் பிரிவுத் தலைவா் டி.நாராயணன், தமிழக தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோா் உடனிருந்தனா்.