ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சாந்தன் காலமானாா்: இலங்கைக்கு இன்று உடல் கொண்டு செல்லப்படுகிறது
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளாகி சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய சாந்தன் (55) புதன்கிழமை (பிப்.28) உயிரிழந்தாா்.
இதையடுத்து, இலங்கை யாழ்ப்பாணத்துக்கு சாந்தனின் உடல் வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், அங்கேயே இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.
அதேபோல், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினியும் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினா். சாந்தன் இறப்புக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளாா். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டாா்.
Advertisement
இலங்கை தமிழரான அவா், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சாந்தனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து உயா் சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். கல்லீரல் செயலிழப்புக்கு (சிரோஸிஸ்) உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை அடுத்து அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவை பலனின்றி புதன்கிழமை காலை 7.50 மணிக்கு அவா் உயிரிழந்தாா்.