தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!
1991 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...
பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற மு. கருணாநிதி, அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தேர்தலில் வென்று முதல்வராகப் பதவியேற்றவர் ஜெயலலிதா!
1989 ஜனவரி சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவால் அதிமுக உடைந்து ஜெ. அணி – ஜா. அணி எனப் போட்டியிட, பெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி முதல்வரானார், ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர்.
ஜன. 27-ல் முதல்வர் பதவியேற்றார் கருணாநிதி; மார்ச் 25 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்குகிறார் கருணாநிதி. ஜெயலலிதா ஏதோ குரல் கொடுக்க ஒரே களேபரம், திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே கடும் மோதல், கைகலப்பு, சேலை கிழிந்து தலைவிரி கோலமாக அவையிலிருந்து வெளியே வந்தார் ஜெயலலிதா (முதல்வராகத்தான் சட்டப்பேரவைக்குத் திரும்பி வருவேன் என்று சபதம் கூறி, சொன்னபடியே 1991-ல் வந்தார்).
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவில் ஜானகி அணி இரண்டே இடங்களில் வென்ற நிலையில், 27 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜெயலலிதா தவிர்க்க முடியாத தலைவராக உருவானார். இரட்டை இலைச் சின்னமும் இவர் வசம் வந்தது. தேர்தலில் நேரிட்ட பெருந்தோல்விக்குப் பிறகு ஒரே மாதத்தில் ஜானகி – ஜெயலலிதா அணிகள் இரண்டும் - பழைய அதிமுகவாக - ஒன்றுபட்டன. தமிழ்நாட்டின் அரசியல், எம்ஜிஆர் – கருணாநிதி என்றிருந்த நிலை மாறி, கருணாநிதி – ஜெயலலிதா என்றானது.
1989, நவம்பரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மறுபடியும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இணைந்த அதிமுகவால் வாக்குகளும் சேரவே, திமுகவுக்குக் கிடைத்திருந்த வெற்றி திசை மாறியது; 39-ல் 38 தொகுதிகளில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி வென்றது.
விடுதலைப் புலிகளுடன் திமுகவுக்குத் தொடர்பு இருப்பதாகவும் சட்ட – ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் தெரிவித்து, 1991, ஜன. 30-ல் மத்தியிலிருந்த பிரதமர் சந்திரசேகர் அரசால் முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டுத் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது (ஆபத்தான ஜனவரி! 1976-ல் முதல்வர் மு. கருணாநிதியின் திமுக அரசு கலைக்கப்பட்டது – ஜன. 30, (1980-ல் முதல்வர் எம்ஜிஆரின் அதிமுக அரசு நீக்கப்பட்டது - பிப். 17), 1988-ல் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் அரசு பதவியிலிருந்து அகற்றப்பட்டது - ஜன. 30, 1991-ல் கருணாநிதியின் திமுக அரசு நீக்கப்பட்டதும் – ஜன. 30!).
ஆனால், அடுத்த இரு மாதங்களில் காங்கிரஸ் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதால், 1991, மார்ச் 6 ஆம் தேதி, சிறுபான்மையான பிரதமர் சந்திரசேகர் அரசும் பதவி விலகியது (இவை எல்லாவற்றுக்குப் பின்னாலும் எழுத நிறைய செய்திகள் இருக்கின்றன). தொடர்ந்து, மக்களவை கலைக்கப்பட்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது; மே 20, 23, 26 – வாக்குப் பதிவு. கூடவே, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல்.
நாடு முழுவதும் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்த நிலையில், மே 21 ஆம் தேதி இரவில் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்த வந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பிரசாரப் பொதுக்கூட்டத் திடலில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலை காரணமாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் பின்னிரு கட்டங்களும் ஜூன் 12, 15-க்கு தள்ளிவைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் ஒட்டுமொத்தமாக ராஜீவ் காந்தியின் மரணத்தைச் சுற்றியே வந்தது. எந்தக் கட்சியின் பிரசாரம் என்றாலும் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் இடம் பெற்றது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்படுத்தி திமுகவை அதிமுக – காங்கிரஸ் கூட்டணியினர் குற்றம் சாட்டினர். திமுகவினரும் பதிலுக்கு ராஜீவ் மரணம் தொடர்பாக நிறைய சந்தேகங்களை எழுப்பினர்.
‘ராஜீவ் காந்தியின் மரணம் முன்னதாகவே தெரியும் என்பதைப் போல அவர் சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்க அதிமுக தலைவர்கள் யாரும் வராதது ஏன்? அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறவிருந்த கூட்டத்துக்குக் கூட்டணிக் கட்சி என்கிற முறையில் அதிமுகவைச் சார்ந்த துணைத் தலைவர்கள் எவரும் ராஜீவ் காந்தியுடன் போகாதது ஏன்? ராஜீவ் காந்தி இறந்த பின்னர் அவரது உடல் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும்போதும் அதிமுகவைச் சேர்ந்த எவரும் அங்கு செல்லாதது ஏன்?’ என்று பூந்தமல்லி பிரசாரக் கூட்டத்தில் கேள்விகளையெழுப்பினார் திமுக தலைவர் மு. கருணாநிதி.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, ‘நான் அங்கு இல்லாததற்குக் காரணம் நான் எனது தொகுதியில் வாக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன். படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் சென்னை புறப்படவே முயன்றேன். போதுமான பாதுகாப்பு இல்லை எனக் காரணம் கூறித் தடுத்துவிட்டனர். அதிமுகவைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் வெவ்வேறு இடங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அங்கு செல்ல முடியவில்லை’ என்றோர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ‘ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற அதிமுக – காங்கிரஸ் தேர்தல் பிரசாரத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் நாங்கள் எல்லாரும் (ராஜீவ் காந்தியும் பிற தலைவர்களும்) ஓரிடத்தில் இருந்தோம். மக்களைச் சந்தித்தோம். பேசினோம்’ என்று குறிப்பிட்டதுடன், ‘கொலைப் பட்டியலில் எனது பெயர் இருக்கிறது என்ற செய்தி கேட்டுச் சுற்றுப் பயணம் செய்யும் திட்டத்தைக் கைவிட்டேன். அதற்குக் காரணம் கோழைத் தனமல்ல. யார் கொலைகாரர்கள் என்று எனக்குத் தெரியாது. எங்கு என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆகவே, எனது தொகுதிகளுக்கேகூட போகாமல் வீட்டிலேயே தங்கியிருக்கிறேன்’ என்றும் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா.
‘ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்கள் அவரைக் கொலை செய்ததன் மூலம் அவர் மேற்கொண்டிருந்த லட்சியங்களைக் கொலை செய்துவிட்டார்கள். அவரது லட்சியங்களைக் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். அதன் மூலம் நாட்டைச் சிதறடித்துவிடலாம் என்பதுதான் அந்த சக்திகளின் எண்ணம்’ என்று இ.காங்கிரஸ் தலைவர் ஜி. கருப்பையா மூப்பனார் குற்றம் சாட்டினார்.
‘ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு இந்தத் தேர்தல் பிரசாரத்தில், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது நியாயந்தானா? என்பது உள்பட சில முக்கியமான பிரச்சினைகள் எல்லாம் மக்களுக்கு மறந்துவிட்டன. ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, தற்போதைய மக்களவை – சட்டப்பேரவைத் தேர்தல்கள் எந்தப் பிரச்சினைகளை முன்வைத்துத் தொடங்கப்பட்டன என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்’ என்று துறைமுகம் ஆதியப்ப நாயக்கன் தெரு பிரசார நிறைவுப் பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்ட கருணாநிதி, ‘மத்தியில் இந்த முறை வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி ஏற்படத் தவறினால், இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மண்டல் கமிஷன் பலனை மக்கள் அடைய முடியாமல் போய்விடும்; பிற்பட்ட மக்களின் வாழ்க்கை நிலை உயராது’ என்றும் எச்சரித்தார்.
‘வன்முறை சக்திகளைப் பலவீனமடையச் செய்வோம். அத்தகைய சக்திகளை உறுதியாக ஒழித்துக் கட்டுவோம். இதற்கு உதவியாக இருக்கட்டும் மக்கள் தீர்ப்பு’ என்று அறிக்கையில் கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா.
ஜூன் 15-ல் வாக்குப் பதிவு; 55.7 சதவிகிதம்.
ஜூன் 16-ல் வாக்கு எண்ணிக்கை – அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. ஏற்கெனவே, அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து - முந்தைய மக்களவைத் தேர்தலில் வென்றதைப் போலவே - இந்தத் தேர்தலிலும் 234 தொகுதிகளில் 225 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுக – 168-ல் போட்டியிட்டு 164-ல் வெற்றி, காங்கிரஸ் – 65-ல் 60 வெற்றி, சோசலிஸ்ட் காங்கிரஸ் – 1.
திமுக போட்டியிட்ட 176 தொகுதிகளில் இரண்டே தொகுதிகளில் (துறைமுகத்தில் கருணாநிதி, எழும்பூரில் பரிதி இளம்வழுதி) மட்டும்தான் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த கூட்டணியே 7 இடங்களில்தான் வென்றது. கருணாநிதியைத் தவிர அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைவரும் தோற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி முதன்முதலாக இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. பண்ருட்டி தொகுதியில் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
(உடன் நடந்த மக்களவைக்கான தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றது. திமுக அணி முழுவதுமாகத் தோற்றது. 1989 நவம்பர் தேர்தலில் இந்தக் கூட்டணியின் இந்திய கம்யூ. நாகப்பட்டினத்தில் மட்டும் வென்றிருந்தது. இந்த முறை அங்கேயும் தோல்வி).
காங்கேயம், பர்கூர் எனத் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெற்றார்.
வெற்றிக்குப் பின் வெளியிட்ட அறிக்கையில், ‘தேர்தல் நேரத்தில் எங்களுக்காக ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த சமயத்தில் களப் பலியான ராஜீவ் காந்திக்கு வீர அஞ்சலி செலுத்துவதுடன், அவர் காண விரும்பிய நவீன இந்தியாவை உருவாக்குவதில் அனைத்து முயற்சிகளிலும் மற்றவர்களுடன் ஒத்துழைப்பதாக’க் குறிப்பிட்டார் ஜெயலலிதா.
‘எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களது திட்டங்களை மதித்து ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். காலத்தை வீணாக்க மாட்டோம். கால தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஒவ்வொரு திட்டத்தையும் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடித்து மக்களுக்குப் பயன்போய்ச் சேரும்படி உழைப்போம்’ என்றும் ஜெயலலிதா உறுதி கூறினார்.
முடிவு வெளியாகி சில நாள்களுக்குப் பிறகே திமுக சார்பில் கருத்துத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பொதுச் செயலர் க. அன்பழகன், ‘ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தால் மக்களிடையே ஏற்பட்ட இரங்கல் உணர்வின் காரணமாகவே இந்தக் கூட்டணி தோல்வியுற்றது’ எனக் குறிப்பிட்டதுடன், ‘ஆட்சிமன்றத்தில் நாம் இடம் பெறாவிட்டாலும் மக்கள் மனதில் நாம் என்றும் இருப்போம்; தொடர்ந்து தொண்டாற்றுவோம்; உண்மை நிலையை அனைத்து மக்களும் உணரும் காலம் விரைவில் வரும்’ என்றும் தெரிவித்தார்.
எனினும் ஒரு வாரத்தில் ஜூன் 22-ல், ‘தமது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தமக்கு ஏற்பட்ட தோல்வியாக எண்ணி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக’ அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ‘பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும்போல எனது பொது வாழ்வுப் பயணம் தொடரும்’ என்றும் குறிப்பிட்டார்.
ஜூன் 24 - முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா. ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஜெயலலிதாவுடன் 17 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இரா. நெடுஞ்செழியன் – நிதி, எஸ்.டி. சோமசுந்தரம் - வருவாய், ஆர்.எம். வீரப்பன் – கல்வி, கே.ஏ. கிருஷ்ணசாமி – சட்டம், க. ராஜாராம் – உணவு, செ. அரங்கநாயகம் – தொழிலாளர் நலன், எஸ். முத்துசாமி – மக்கள் நல்வாழ்வு, எஸ். கண்ணப்பன்- பொ.ப.து., கு.ப. கிருஷ்ணன் – விவசாயம்.
பதவியேற்றதும் விழா மேடையிலேயே கே.ஏ. செங்கோட்டையன், ஈ. மதுசூதனன், எஸ். கண்ணப்பன், அழகு திருநாவுக்கரசு, கு.ப. கிருஷ்ணன், டி.எம். செல்வகணபதி, முகமது ஆசிப், இந்திரகுமாரி, எம். ஆனந்தன், டி. ஜெயகுமார் ஆகிய பத்து அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா காலைத் தொட்டும் காலில் விழுந்தும் வணங்கினர்!
ஐந்தாண்டுகள் நிலைத்திருந்தது ஜெயலலிதாவின் அரசு. ஆனால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அப்படியே தலைகீழ் மாற்றம். ஏன்? இடையே என்னவெல்லாம் நடந்தன?
[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]
Memories of the 1991 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...
இதையும் படிங்க... தேர்தல் 1989: 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் கருணாநிதி!