தமிழ்நாடு

சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

DIN

பபாசி சார்பில் நடைபெறும் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான 47-ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழா நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து அங்குள்ள அரங்குகளைப் பார்வையிட்டார்.
விழாவில் அவர் பேசுகையில், சென்னை புத்தகக் காட்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன்; இருப்பினும் தற்போதுதான் முதல்முறையாகத் தொடங்கி வைக்கிறேன். இவ்விழாவில் பதிப்பாளராகவும் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் (உரைநடை), எழுத்தாளர்கள் தமிழ்மகன் (நாவல்), அழகிய பெரியவன் (சிறுகதை), கவிஞர் உமா மகேஸ்வரி (கவிதை), மயிலை பாலு (மொழிப்பெயர்ப்பு), வேலு. சரவணன் (நாடகம்) ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும், பபாசி சார்பில் பதிப்பகச் செம்மல் விருது, சிறந்த நூலகர் விருது, சிறந்த சிறுவர் அறிவியல் நூல் உள்பட சிறப்பு விருதுகள் 9 பேருக்கு அளிக்கப்பட்டன. இந்த விருதுகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தொடக்க விழாவில்  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா, பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
900 அரங்குகள்: நிகழாண்டு புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
 தினமும் மாலையில் சிந்தனை அரங்கில்  அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சியை விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் பார்வையிடலாம்.
இதற்கு ரூ.10 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT