தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து, வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், நாளை உடனடியாக பணிக்குத் திரும்புவதாகவும், தொழிற்சங்கங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினரும், நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்துவிட்டு, முதல்வரின் ஆலோசனையைப் பெற்று ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் போராட்டம் நடத்துவது, மக்களை பிணைக் கைதிகளாக வைத்து போராடுவது போல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படக் கூடாது, நாளை முதல் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு முழுமையாக பணிகளை ஒதுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறது.

மேலும், ஜனவரி 19ஆம் தேதி வரை போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைக்கிறோம் எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

தமிழகத்தில் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எங்களுக்கான உரிமைகளைத்தான் அரசிடம் நாங்கள் கோரி வருகிறோம். ஜனவரி மாத அகவிலைப்படியைத் தான் உடனே தர கோருகிறோம். கோரிக்கைளை வலியுறுத்தயும் அரசு  செவிசாய்க்காததாலேயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

டிசம்பர் 19ஆம் தேதி  வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அரசு தொடர்ந்து மௌனம் காத்தது என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இன்று காலை பொது நலன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “பொங்கல் பண்டிகையின்போது வேலைநிறுத்தப் போராட்டம் தேவையா? பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தால் நகர்புற மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராட்டம் நடத்த உரிமை இல்லை எனக் கூறவில்லை, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

போராட்டத்தை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைப்பது குறித்து தொழிற்சங்கத்தினரும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து அரசுத் தரப்பும் பதிலளிக்கக் கோரி பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை!

தாமதமாக வாக்குப்பதிவு விவரம் வெளியீடு: உச்ச நீதிமன்றத்தில் மனு

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

SCROLL FOR NEXT