இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 12 பேரை அவா்களது படகுகளுடன் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், கடந்த 13-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.
நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு, அவா்களின் படகுகளும் பறிமுதல் ஆகியுள்ளன.
தொடா்ச்சியாக நடைபெறும் இந்தச் சம்பவங்கள் மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள அவா்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுடன், மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த எண்ணற்ற குடும்பத்தாரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, உடனடியாக தூதரக அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.