தமிழ்நாடு

‘காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்': ஆளுநரை விமர்சித்த முதல்வர்!

DIN

சென்னை: கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர்கள் மீது அடக்குமுறை நிகழ்வதாக கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு, சென்னை கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர் மீது அடக்குமுறை நிகழ்வதாக ஆளுநரின் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

"ராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை பாஜகவினர்  ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்  குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, மத்திய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. 

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள ஆர்.என்.ரவி, அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால ராமர்  சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி. அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்.

பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

டர்போ டிரைலர்!

‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்கள்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை!

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

SCROLL FOR NEXT