வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு சத்திய ஞான சபையில் நடைபெற்ற கொடியேற்றம். 
தமிழ்நாடு

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றம்!

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜோதி தரிசன நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர்.

நிகழாண்டு 153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் தரும சாலை அருகே சன்மார்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, மருதூரில் வள்ளலார் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றது.

 வள்ளலார் பயன்படுத்திய பொருள்களை பல்லக்கில் சுமந்து செல்லும் சன்மார்க்க அன்பர்கள்

தொடர்ந்து, காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது.முன்னதாக, தெய்வ நிலையத்துக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள், வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பலவகைப் பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன் ஊர்வலமாக கொடிமரத்தின் அருகே வந்தனர். 

அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், "அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி' என்ற வள்ளலாரின் பாடலைப் பாடினர். பின்னர், வள்ளலாரின் கொடி பாடல்களை பாடியபடி சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து, அந்தப் பல்லக்கு சத்திய ஞான சபையை வலம் வந்தது. 

விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

கலர் கலராக, ஸ்டைலாக முடி‌ இருந்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு அறிவுரை! | Tanjore

SCROLL FOR NEXT