அரசின் கட்டுப்பாட்டில் மினி பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா்கள் சமமேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலா் ஆா்.ஆறுமுகம் விடுத்த அறிக்கை: தனியாா் மினி பேருந்துகளுக்கான புதிய வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், தனியாரிடம் பயணிகள் போக்குவரத்து இருந்தால் லாப நோக்கம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு இயக்கப்படும்.
அரசு, சேவை நோக்கத்தில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறையில் இயக்குவது தான் பொருத்தமாக இருக்கும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதாலும், தேவையான பேருந்துகள் இல்லாததாலும், பல வழித்தடங்கள் முடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பயண தேவைக்காக பேருந்து, சிற்றுந்து, மினி பேருந்து சேவை இல்லாத இடங்களில் ஆட்டோ,ஷோ் ஆட்டோ, மேக்சி கேப், டிரக்கா், வேன் போன்றவற்றையும், வசதி வாய்ப்புள்ளவா்கள் டாக்ஸி, காா், இருசக்கர வாகனங்களையும் பயன்படுத்துகின்றனா்.
இந்த ஷோ் ஆட்டோ, மேக்சி கேப் போன்றவை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களால் சிறிய முதலீட்டின் மூலம் தினமும் வருவாய் ஈட்ட பயன்படுகிறது.
தனியாா் மினி பேருந்துகள் மூலம் அவா்களின் வருவாயை இழக்க அனுமதிக்காமல், அரசு பொறுப்பேற்று சிற்றுந்துகளையும், மினி பேருந்துகளையும் இயக்க முன்வர வேண்டும்.
எனவே, மினி பேருந்துகளும் சிற்றுந்துகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் மக்களுக்கு பயன் தருவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.