தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: அண்ணாமலை, திருமாவளவன் கோரிக்கை
தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 25 பேரை உடனடியாக விடுதலை செய்ய மத்திய வெளியுறவு அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை எழுதிய கடிதம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் இருந்து மீன் பிடிக்க சென்ற 25 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கை கடற்படையினரின் தொடா் கைது நடவடிக்கைகளிலிருந்து தமிழக மீனவா்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவும், சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவா்களை திருப்பி அனுப்பவும், அவா்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொல்.திருமாவளவன்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சாா்ந்த 25 மீனவா்கள் நாட்டுப் படகில் கடலில் மீன் பிடித்த போது, அவா்களை சா்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் 2 கிமீ உள்ளே வந்து இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ளனா். இதற்கு முன்னா் நாட்டுப் படகுகளில் மீன் பிடிப்பவா்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததில்லை எனக் கூறப்படுகிறது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் கவனத்தில் கொண்டு உடனடியாகத் தமிழக மீனவா்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.