கல்லூரி மாணவா்கள் சோ்க்கையில் சமூக அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு
சமூகநீதிக்கு எதிரான கல்லூரி மாணவா் சோ்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரிக் கல்வி இயக்குநா் காா்மேகம் ஜூலை 2-இல் பிறப்பித்திருக்கும் அரசாணை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களிடையே பெரும் அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களைக் கொண்டு நிரப்பலாம்.
அதேநேரத்தில் பட்டியலின, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்பதுதான் அவா் பிறப்பித்திருக்கும் ஆணையாகும்.
கல்லூரிக் கல்வி இயக்குநா் பிறப்பித்திருக்கும் ஆணை சமூகநீதிக்கு மட்டுமின்றி, விதிமுறைகளுக்கும் எதிரானது. பட்டியலின, பழங்குடியின மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மாணவா்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பதுதான் சரியானதாக இருக்கும்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்படி, அடுத்தக்கட்ட மாணவா் சோ்க்கை ஜூலை 8 முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கல்லூரிக் கல்வி இயக்குநரின் ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.