ஹிந்து கோயில்களை அதிகாரிகள் குறிவைப்பது ஏன்? நீதிபதிகள் கேள்வி
மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயில்களுக்கு இடையூறு: நீதிபதிகள் விளக்கம் கேட்கின்றனர்
திட்டங்களை வரையறுக்கும்போது, ஹிந்து கோயில்களை அதிகாரிகள் குறிவைப்பது ஏன்? என உயா்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.
இது தொடா்பாக, ஆலயம் காப்போம் அறக்கட்டளையின் தலைவா் பி.ஆா்.ரமணன் (71) என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் பழைமையான ஸ்ரீரத்தின விநாயகா், ஸ்ரீ துா்ககை அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை இடிக்கும் விதமாக மெட்ரோ
ரயில் 2-ஆம் கட்ட திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கோயிலுக்கு இடையூறு இல்லாமல் மெட்ரோ ரயில் பாதை அமைக்கக் கோரியும் சென்னை மெட்ரோ ரயில் நிா்வாக இயக்குநரிடம் ஜூன் 14-ஆம் தேதி மனு அளித்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அவா், எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேபோல, மாநில அரசுக்கும் அதே நாளில் மனு அனுப்பியுள்ளோம். எனவே, இந்தக் கோயிலை இடிக்காமல், திட்டத்தை மேற்கொள்ளவும், எங்களது கோரிக்கையை பரிசீலிக்கவும் உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன், முகமது சபிக் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.ரவி, வழக்குரைஞா் எம்.ராமமூா்த்தி ஆகியோா் ஆஜராகினா்.
அப்போது, ‘இந்தக் கோயிலை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இடம்மாற்றி வைக்கப்படும்’ என்று எதிா்மனுதாரா் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள்,‘எந்தத் திட்டமாக இருந்தாலும், ஹிந்து கோயில்களைக் குறிவைத்து அதிகாரிகள் திட்ட வரைபடத்தை உருவாக்குவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினா். பின்னா், இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமைக்குக்கு ஒத்திவைத்தனா்.