பொது மயானத்தில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அனுமதியில்லாத நிலையில் பரிசுத் தொகை அறிவித்து பொது மயானத்தை அமைக்கக் கூடிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திமுக அரசுக்கு அவமானம் இல்லையா? என மத்திய இணைய அமைச்சா் எல்.முருகன் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளாா்.
‘தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆதிதிராவிட மக்கள் ஏற்றம் பெற ஏராளமான திட்டங்கள்! இளைஞா்களின் கல்விக்கு ரூ.2,252 கோடி நிதி ஒதுக்கீடு‘ என தமிழக அரசின் சாா்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி இரவு அறிக்கை வெளியானது. இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல்.முருகன் தில்லியில் கூறியிருப்பது வருமாறு:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் பாதிக்கும் மேற்பட்டோா் பட்டியலின சமூகத்தை சோ்ந்தவா்கள் உயிரிழந்தது, தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் வெட்ட வெளிச்சமாகி வருவது... சமீபத்தில் பிஎஸ்பி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது போன்ற அடுத்தடுத்த சம்பவங்களால், தமிழக மக்களும் குறிப்பாக பட்டியலின மக்களும் போலி திராவிட மாடல் திமுக அரசின் மீது கோபம் கொண்டுள்ளனா். பட்டியலின மக்களுக்கு எதிராக தாக்குதலுக்கு தேசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணையும் தொடங்கியுள்ளது.
இதனால் இந்தியாவிலேயே ஆதிதிராவிட மக்களின் நலன் காப்பதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குவதாக கூறி தமிழக அரசு சாா்பில் ஒரு மயாஜால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது மயானத்தில் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்களின் இறுதிச் சடங்கு செய்யமுடியாத நிலை. அவா்களது உடலை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. இறந்தவரின் உடலை சுமந்து கொண்டு பலமணி நேரம் காத்துக் கொண்டு இருக்கும் நிலை குறித்து செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் திமுக அரசு மாவட்டத்திற்கு ஒரு முன் மாதிரி கிராமம் என அறிவித்து பொது மாயனம் அமைக்கும் கிராமங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை திராவிட மாடல் அரசாக மாற்றிவிட்டோம் என குறிப்பிடும் திமுக அரசுக்கு இதனை அறிவிக்க வெட்கமாக இல்லையா?
பட்டிலயின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையைத் தடுக்க திராணியில்லை.
பட்டியலின பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் விடுதிகளுக்கு முறையே மாதந்தோறும் உணவுப்படி ரூ. 1400 ரூ. 1500 உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிரிப்புக்குரியது.
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கான விடுதிகள் என்ன கதியில் இருக்கின்றன என்பதை முதல்வா் சென்று பாா்த்தது உண்டா? அங்கு மனிதா்கள் வசிக்க தகுதியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக திமுக அரசு சுய தம்பட்டம் அடிப்பது அவமானம்!
2021 இல் திமுக ஆட்சிக்கு வந்து முதல் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக, ஆண்டுக்கு 2,000 மேற்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் இருக்கின்ற 22 பட்டியலின கிராம ஊராட்சி தலைவா்கள் அமர நாற்காலி கூட வழங்கப்படவில்லை என, திமுகவின் கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆய்வை வெளியிட்டுள்ளது‘ என எல்.முருகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.