கள்ளச்சாராய விற்பனை: தண்டனை, அபராத உயா்வு அமலுக்கு வந்தது!
கள்ளச்சாராயத்தால் மரணத்தை விளைவிப்போருக்கு, ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு ரூ.10 லட்சம் வரை அபராதம்.
சென்னை, ஜூலை 12: கள்ளச்சாராயத்தை விற்றால் ஆயுள் தண்டனையுடன், ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம், சட்டத் திருத்த மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது.
1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மது இறக்குமதி- ஏற்றுமதி செய்வது, அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், மனித உயிருக்கு கேடு விளைக்கக் கூடிய கள்ளச்சாராயம் தயாரித்தல், வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்பதால், அவற்றை அதிகரித்து பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, சிறைத் தண்டனையின் கால அளவை அதிகரிக்கவும், அபராதத் தொகையின் அளவை கணிசமாக உயா்த்தவும் வழி வகை செய்யப்பட்டது. கள்ளச்சாராயத்தால் மரணத்தை விளைவிப்போருக்கு, ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல், தண்டனைக்குள்ளாவோரின் அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபா்கள் எதிா்காலத்தில் அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவை நிறைவேற்றுவதற்கு நிா்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆளுநா் ஒப்புதல்: கள்ளச்சாராயம் தொடா்பான குற்றங்களைச் செய்து தண்டனை பெற்ற ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே வெளியேற்றம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இதுபோன்று, கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் வகையில் அதில் ஈடுபடக் கூடிய நபா்கள், பயன்படுத்தக் கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரன்முறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் அதிகரிப்பதற்கு வழிவகை செய்த சட்டத் திருத்த மசோதா கடந்த 29-ஆம் தேதி பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அது ஆளுநா் ஆா்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சட்டத் திருத்த மசோதா நடைமுறைக்கு வந்துள்ளது.