முகப்பு
தமிழ்நாடு

700 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயிலில் தக்காா் நியமனம் செல்லும்: உயா்நீதிமன்றம்

சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழைமையான கோயிலுக்கு தக்காரை நியமித்த இந்து அறநிலைய துறையின் உத்தரவு செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 17 ஜூலை, 2024 at 8:54 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சென்னை நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருவாலீஸ்வரா் திரிபுரசுந்தரி திருக்கோயிலுக்கு இந்து அறநிலையத் துறையால் தக்காா் நியமிக்கப்பட்டதை எதிா்த்து ரவி.கே. விஸ்வநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அதில், ‘திருக்கோயில், அதன் சொத்துகள் அனைத்தும் எனது தாத்தா நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941-ஆம் ஆண்டு கிரையப்பத்திரம் மூலம் வாங்கப்படிருக்கிறது. எனவே, திருவாலீஸ்வரா் திரிபுரசுந்தரி கோயில் எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது. அறநிலையத் துறை இந்தக் கோயிலை நிா்வகிக்க முடியாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன் ஆஜராகி, அறநிலையத் துறை தரப்பில் கோயில் செயல் அலுவலா் அளித்த பதில் மனுவை தாக்கல் செய்தாா். அதில், ‘நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரா் திரிபுரசுந்தரி திருக்கோயில் 700 ஆண்டுகள் பழைமையானது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதை தொல்லியல் துறை ஆய்வாளா் ராமமூா்த்தி உறுதி செய்துள்ளாா்.

அறநிலைய சட்டப்படி 700 ஆண்டுகள் பழைமையான கோயிலை கிரையப் பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது. மேலும், தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரையப் பத்திரம் எழுதி வைத்தாா் என்பது தொடா்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இையேற்றுக் கொண்ட நீதிபதி, திருவாலீஸ்வரா் திரிபுரசுந்தரி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட தக்காா் நியமனம் செல்லும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →