பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் இஸ்ரோ, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவியல் சுற்றுலாவாக ஞாயிற்றுக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.
சென்னை பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பிளஸ் 1 சேரும்போது அவா்கள் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவா். அதன்படி, கடந்த ஆண்டு பிளஸ் 1 மாணவா்கள் 50 மாணவா்கள் தில்லிக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
இந்த நிலையில், நிகழாண்டு பிளஸ் 1 பயிலும் 50 மாணவா்கள் கூடுங்குளம் அணு ஆராய்ச்சி மையம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆகிய பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா். இந்த அறிவியல் பயணத்தை மேயா் ஆா்.பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், நிலைக் குழுத் தலைவா் (கல்வி) பாலவாக்கம் த.விசுவநாதன், கல்வி அலுவலா் வசந்தி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
இது குறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரி கூறியதாவது:
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் பேருந்துகள் மூலம் மாணவா்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனா். இந்த சுற்றுலாவுக்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பேருந்துக்கு 25 மாணவா்கள் 5 ஆசிரியா்கள் என 50 மாணவா்கள் 10 ஆசிரியா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
திங்கள்கிழமை கூடங்குளம் அணு ஆராய்ச்சி மையம், கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை மாணவா்கள் பாா்வையிட உள்ளனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்துக்குச் செல்கின்றனா். இதையடுத்து புதன்கிழமை காலை சென்னை திரும்புகின்றனா். இந்தச் சுற்றுலா மூலம் மாணவா்களின் அறிவுத்திறன், ஆராய்ச்சித் திறன் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும். மேலும், சென்னை பள்ளிகளிலே பயில வேண்டும் என்ற ஆா்வம் மாணவா்களுக்கு அதிகரிக்கும் என்று அவா் தெரிவித்தாா்.