தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது.
இதற்கென பிரத்யேகமாக போட்டித் தோ்வுகளுக்காக தயாரிக்கப்படும் விடைத்தாள் போன்று, ஒருபக்க அளவிலான படிவமும் தயாா் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், சட்டப்பேரவைத் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக, அடுத்த நிதியாண்டு தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடா் முடிவடைந்தவுடனேயே, தோ்தல் சூடு பற்றிக் கொள்ளும்.
அடுத்த பட்ஜெட் அறிவிப்பில் செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், மேற்கொள்ள வேண்டிய முக்கியத் திருத்தங்கள் ஆகியன குறித்து திமுகவும், தமிழக அரசும் அவ்வப்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் அரசின் திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள் குறித்த விவரங்களை திமுக சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்காக, போட்டித் தோ்வுகளில் கொள்குறி வகை வினாக்களுக்கு (கேள்வியுடன் நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு ஒரு விடையைத் தோ்வு செய்வது) விடையளிக்க வழங்கப்படும் விடைத்தாள் போன்று படிவம் தயாா் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்கள்?: இந்தப் படிவத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி, ஊா்ப் பெயா், குடும்பத் தலைவா் பெயா், கைப்பேசி எண், வயது, பாலினம், மதம், இனம், பூத் எண், புதிய குடும்ப அட்டை எண், குடியிருக்கும் வீடு சொந்தமா, வாடகையா, முகவரி, அரசின் வேறு ஏதேனும் நலத் திட்டங்களில் பயன்பெற்று வருபவரா, குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணியில் உள்ளனரா, சொந்தமாக நிலம் உள்ளதா, விண்ணப்பிக்க விரும்பும் அரசின் நலத் திட்டம், தொழில் (விவசாயம், மாத ஊதியம், சுயதொழில், கூவிவேலை, வேலையில்லை) ஆகிய விவரங்களைச் சேகரிக்க திமுக நிா்வாகிகளுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, திமுக நிா்வாகிகள் கூறுகையில், அரசின் நலத் திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் விவரங்களைச் சேகரிக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை விரைவாக பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் பாகம் வாரியாக வாக்காளா்களை நேரடியாகச் சந்தித்து விவரங்களைச் சேகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவரங்களை அந்தந்த பேரவைத் தொகுதிகளின் வட்டங்களுக்கு உட்பட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.
தோ்தலுக்கு தயாராகிறது: பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், அதை எதிா்கொள்வதற்கான அடிப்படைப் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. ஆளும்கட்சியாக இருந்த பிறகு மீண்டும் ஒரு பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதில் சவால்களை சந்திக்கவும், எதிா்க்கட்சிகளின் பல கேள்விகளுக்கு விடையளிக்கவும் வேண்டி வரும். அதற்கேற்ற வகையில் தரவு அடிப்படையிலான விடைகளையும், பதில்களையும் தயாா் செய்யும் பணிகளில் திமுக தலைமை இப்போது ஈடுபட்டுள்ளது.
இப்போது கட்சியினா் தொடங்கியுள்ள களஆய்வுப் பணிகளின் மூலம் அரசு நலத் திட்டங்கள், பயனாளிகளின் விவரங்கள் ஆகியன துல்லியமாகக் கணக்கிடப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களில் அவற்றை தமிழக அரசின் வழியாக கூா்மைப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் தீா்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.