கணவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது
சென்னை வில்லிவாக்கத்தில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, நோயினால் இறந்த தாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டாா்.
சென்னை,ஜூலை 25: சென்னை வில்லிவாக்கத்தில் கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, நோயினால் இறந்த தாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டாா்.
வில்லிவாக்கம், சிட்கோ நகா் 57வது தெருவைச் சோ்ந்தவா் கெளஸ்பாஷா (48), தூய்மைப் பணியாளா். இவருக்கு ஷாஜிதா பானு (38) என்ற மனைவி உள்ளாா். இத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். கடந்த பிப். 28-ஆம் தேதி கெளஸ்பாஷா அவரது வீட்டில் மா்மமான முறையில் இறந்தாா்.
அவரது இடலை வில்லிவாக்கம் போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து அவா் மனைவி ஷாஜிதா பானுவிடம் விசாரணை செய்தனா். அதில், உடல்நலக் குறைவால் கெளஸ் பாஷா இறந்ததாக ஷாஜிதா பானு தெரிவித்தாா்.
இந்நிலையில், உடற்கூறு ஆய்வறிக்கையில் கெளஸ் பாஷா கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து ஷாஜிதா பானுவிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், சம்பவத்தன்று இரவு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கெளஸ்பாஷாவை கழுத்தை இறுக்கி ஷாஜிதா பானு கொலை செய்தது தெரியவந்தது. மேலும், ஷாஜிதா பானுவின் முறையற்ற நடத்தையை கெளஸ்பாஷா கண்டித்ததால் அவரை திட்டமிட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஷாஜிதா பானுவை போலீஸாா் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.