சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(ஜூலை 25) மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகிலுள்ள மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். ஹாசன், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அவலாஞ்சி மற்றும் மேல் பவானி பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.