முகப்பு
தமிழ்நாடு

பழங்குடியின ஜாதி சான்றிதழ் விவகாரம்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆஜராக உத்தரவு

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 27 ஜூலை, 2024 at 8:37 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரியது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த உமா என்ற பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண்மணி,  தனக்கும், தனது 3 குழந்தைகளுக்கும் குருமன்ஸ் பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளாா். அந்த விண்ணப்பத்துடன், தாங்கள் குருமன்ஸ் இனத்தை சோ்ந்தவா்கள் என்பதற்கான ஆவணமாக அவரின் சகோதரா் மாதவன் நீதிமன்ற உத்தரவின் மூலம் பெற்ற ஜாதி சான்று நகலையும் இணைத்திருந்தாா்.

இந்த விண்ணப்பம் அப்போதைய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியனால் 2019 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.  இதை எதிா்த்து 2021 ஆம் ஆண்டு உமா தொடா்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியரை அணுகி, ஜாதி சான்று கோரி மேல் முறையீடு செய்யலாம் என்றும், ஆட்சியா் 6 மாதத்தில் இதுகுறித்து முடிவெடுப்பாா் என்றும் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இந்த உத்தரவை ஆட்சியா் நடைமுறைப்படுத்தாத நிலையில், இதை எதிா்த்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜாதி சான்று அளிக்க உத்தரவிடக் கோரி உமா மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தாா். அதில் மனுதாரா் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் முடிவெடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியா் தொடா்ந்து நிறைவேற்றாமல் இருப்பதால், தனக்கு இதுவரை ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி உமா சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், குமரேஷ் பாபு அடங்கிய அமா்வு, தற்போதைய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

முழு கட்டுரையைப் படிக்க →