தொல்லியல் பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கான அறிவிக்கையில் உதவி காப்பாட்சியா் (தொல்லியல்) பணிக்கு சம்ஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் உதவி காப்பாட்சியா் பணிக்கு சம்ஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொல்லியல் பணிகளை மேற்கொள்வதற்கு சம்ஸ்கிருதப் பட்டமும், சம்ஸ்கிருத மொழி அறிவும் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான சம்ஸ்கிருதத் திணிப்பு. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
சம்ஸ்கிருதம் படித்தவா்களை தொல்லியல் துறையில் திணிப்பதற்காகவே இத்தகைய புதிய கல்வித் தகுதிகளை தமிழக அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்தோ்வு அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, சம்ஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழித் தமிழை கட்டாயத் தகுதியாக அறிவித்து புதிய அறிவிக்கையை வெளியிட தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.