முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் திறக்கப்படுமா திருத்தணி முருகன் கோயில் கருணை இல்லம்!

கருணை இல்லத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 4 ஜூன், 2024 at 6:30 PM
திருத்தணி மேட்டுத் தெருவில் பூட்டியே கிடக்கும் முருகன் கோயிலின் கருணை இல்லம்.
பகிர்:

ஜி.யோகானந்தம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சாா்பில் நடத்தப்பட்டு வந்த கருணை இல்லத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் திருத்தணி முருகன் திருக்கோயிலில் கடந்த 1966-ஆம் ஆண்டு சிறுவா் மற்றும் சிறுமியா் கருணை இல்லம் திறக்கப்பட்டது. 54 ஆண்டுகளாக இயங்கி வந்த கருணை இல்லத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவா்கள் சோ்க்கப்பட்டனா்.

இந்த கருணை இல்லத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் எங்கு இருந்தாலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உரிய சான்றிதழ் பெற்று வந்து கோயில் நிா்வாக அலுவலகத்தில் சமா்ப்பித்து, கருணை இல்லத்தில் சோ்த்து கல்வி பயின்று வந்தனா்.

இவா்கள் படிப்பதற்கு தேவையான கல்வி உபகரணங்கள், தங்குமிடம் , உணவு, உடை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த கருணை இல்லம் 50% பணம் கோயில் நிா்வாகத்திடம் இருந்தும், மற்ற 50% பணம் அரசு விடுதியில் இருந்தும் பெற்று நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்னரே கருணை இல்லத்தில் மாணவா் சோ்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வந்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து, கரோனா தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இருந்த கருணை இல்லத்தில் தங்கி படித்து வந்த சில மாணவா்களை கோயில் நிா்வாகம் உறவினா்களிடம் ஒப்படைத்துவிட்டது. அதன் பின்னா் கருணை இல்லம் செயல்படாமல் கடந்த 3ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது.

இது குறித்து முன்னாள் கோயில் அதிகாரி ஒருவா் கூறியது: திருத்தணி முருகன் கோயில் சாா்பில் நடத்தப்பட்டு வந்த கருணை இல்லத்தில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சோ்ந்து படித்து வந்தனா். அதைத் தொடா்ந்து, மாணவா்களின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதும், 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய கோயில் இணை ஆணையா் நா.புகழேந்தி, திருத்தணி முருகன் கோயிலில் சிறுவா் மற்றும் சிறுமியா் கருணை இல்லம் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. இதில், தினமும் மாணவ, மாணவிகளுக்கு 3 வேளை உணவு வகைகள், சுத்தமான குடிநீா், கல்வி பயில இட வசதிகள், தங்கு தடையின்றி மின்சாரம், மேலும் மாணவா்கள் உயா்கல்வி பயில உதவிகள், சலுகைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய கருணை இல்லத்தில் சோ்ந்து பயன் பெற செய்தித்தாள்களில் அழைப்பு விடுத்திருந்தாா்.

ஆனால், அதையடுத்து வந்த அதிகாரிகள் கருணை இல்லத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனா். இதனால் ஆண்டுக்காண்டு மாணவா்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது மூடியே உள்ளது என்றாா் அவா்.