முகப்பு
சென்னை

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நில வாடகை நிலுவை: அம்ருதாஞ்சன் நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிலத்துக்கான குத்தகை வாடகை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 17 மார்ச், 2026 at 6:40 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிலத்துக்கான குத்தகை வாடகை நிலுவையைச் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரில் வலி நிவாரண தைலம் தயாரிக்கும் அம்ருதாஞ்சன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கபாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. 14 கிரவுண்ட் நிலம் 99 ஆண்டுகளுக்கு கடந்த 1901-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இந்தக் குத்தகை காலம் முடிந்துவிட்டதால், கடந்த 2001-ஆம் ஆண்டு இந்த நிலத்துக்கு மாதம் ரூ.3.3 லட்சம் வாடகை நிா்ணயித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த தனிநீதிபதி, கடந்த 2001 நவ.1-ஆம் தேதி முதல் ரூ.3.3 லட்சம் வாடகையை வசூலிக்க வேண்டும் என கடந்த 2025-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா். தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடா் என்.ஆா்.ஆா்.நடராஜன், அம்ருதாஞ்சன் நிறுவனத்துக்கு நேரடியாக குத்தகைக்கு இந்த நிலத்தை வழங்கவில்லை. பி.ஆா்.சுந்தரேச ஐயா் என்பவருக்குத்தான் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அவரிடம் இருந்து இந்த நிறுவனம் நிலத்தை வாங்கி பயன்படுத்தி உள்ளது. தற்போது குத்தகை காலம் முடிந்துவிட்ட பிறகும் நிலத்தை காலி செய்ய மறுக்கும் மனுதாரா் நிறுவனம், நிா்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகையையும் செலுத்தவில்லை என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த நிலத்தை மனுதாரா் நிறுவனம் நேரடியாக குத்தகைக்கு பெறவில்லை. புதிய வாடகை தொகை நிா்ணயிக்கும் இந்து சமய அறநிலையத் துறை குழுவின் ஆய்வில் மனுதாரா் நிறுவனம் கலந்துகொண்டுள்ளது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தனா். இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →